/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நள்ளிரவு நேர மின்தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அச்சம்நள்ளிரவு நேர மின்தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அச்சம்
நள்ளிரவு நேர மின்தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அச்சம்
நள்ளிரவு நேர மின்தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அச்சம்
நள்ளிரவு நேர மின்தடையால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அச்சம்
கோவை : இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவையில் ஏற்கனவே மின் தடை நேரம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. பகலில் இரண்டு மணி நேர மின்தடை சுழற்சி முறையில் நகர் முழுவதும் அமலில் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு ஆறு மணி நேரம் மின் தடை உள்ளது. மின் பற்றாக்குறையால் மின்சார வாரியமே அறிவித்த நேரம் இது. இவை தவிர, அறிவிக்கப்படாமல், முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் "எப்போது மின்சாரம்' நிற்குமோ என்றநிலை ஏற்பட்டுள்ளது. எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் மின்சாரம் நிறுத்தம் இருக்கும் என்பது, பகலில் மட்டுமல்ல; இரவிலும் தொடர்கிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாலை நேரங்களில் ஏற்படும் மின் தடையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாலையிலும் சில இடங்களில் மின் தடை இருப்பதால், படிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில், நள்ளிரவில் ஏற்படும் மின் தடை மக்களை மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. எப்போதுமே, தூங்கும்போது குழந்தைகளும் பெரியவர்களும் மின் விசிறி சுழலாமல் தூங்க முடியாத நிலை உள்ளது.
கோவை நகரின் வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்சம் மின்விசிறி சுழல்வது அவசியம். அதோடு, கொசுக்கடியில் இருந்து தப்பவும், இது உதவுகிறது. நள்ளிரவில் ஏற்படும் மின்தடையால், குழந்தைகளும் பெரியவர்களும் தூக்கத்தை இழக்கின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், இவ்வாறு சரியான தூக்கம் இன்மையால் தவிக்கின்றனர். தேர்வு எழுதும்போது இரவு தூக்கம் போன சோர்வால், துவண்டு விடுகின்றனர். இரவில், மின்தடை நேரம் எந்த பகுதிக்கும் அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்படவில்லை. எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என அறிந்தாலாவது, அதற்கேற்ப முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். விவசாயத்தின் நிலையோ, படு மோசமாகி வருகிறது. இலவச மின்சாரம் என்பதால், "எப்போது மின்சாரம் வரும்' என விவசாயிகள் எதிபார்க்கும் சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் முறையாக வராததால் பல ஏக்கர் நிலங்களில், விவசாயம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு ஏற்பட்டு, காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. தொழில் நிறுவனங்களிலும் இதே நிலை தொடர்கிறது. அதிகம் பாதிக்கப்படுவது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். அதி நவீன இயந்திரங்கள், திடீரென நிற்கும் மின்சாரத்தால், பழுதடைந்து விடுகின்றன. இவற்றை சரி செய்யும் நேரமும், பாதிப்பும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தொழில் நிறுவனத்தினர், உற்பத்தியை சீராக்க முடியாததால், குறித்த நேரத்தில் ஆர்டர்களை தர இயலாமல் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தொழில் உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம், "மின் தடை நேரத்தை முறையாக அறிவிக்க வேண்டும்; பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பு.
விரைவில் நடவடிக்கை! தமிழ்நாடு மின் வாரிய கோவை தலைமைப் பொறியாளர் தங்கவேல் கூறுகையில், ""கடந்த ஆண்டை விட மின் உற்பத்தி அதிகமாயிருந்தாலும், மின் தேவை அதிகரித்துள்ளது. கோவையின் கூடுதல் மின் தேவை பற்றி, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின் தடை நேரம் பற்றி அரசே அறிவிக்கும் வாய்ப்புள்ளது,'' என்றார்.